வீட்டுக்குள் நுழைந்து ஒருவரின் தலையை துண்டித்து கொன்ற கும்பல் மற்றொருவரையும் வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. முக்கொலை ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைகளுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
அம்பாந்தோட்டை – அம்பலாந்தோட்டை – மாமடல பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், 34 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் மாமனார் படுகாயங்களுக்கு உள்ளானார்.
வீட்டுக்குள் நுழைந்த மூவர் குழு அவரின் தலையை வெட்டிக் கொன்றது. இந்தக் கொலையை தடுக்க முனைந்தவரை வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு, துண்டிக்கப்பட்ட தலைiயை மாமடல பகுதியில் அமைந்துள்ள சிலை ஒன்றின் அருகே தலையைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளது. அத்துடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது வேண்டுமென்றே விட்டுச் செல்லப்பட்டதா அல்லது தற்செயலாக விடுபட்டதா என்பது தெரியவரவில்லை
இவ்வாறு கொல்லப்பட்டவர் கடந்த ஜனவரி 2ஆம் திகதி மாமடல பகுதிக்கு சற்றுத் தொலைவிலுள்ள அலேகொடை என்ற பகுதயில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்தின் சந்தேகநபராவார். விளக்கமறியலில் இருந்த அவர் கடந்த மார்ச் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
