வழக்கில் தவறான ஆட்சேபம்: வழக்காளிக்கு ரூ. 20 ஆயிரம் செலுத்துமாறு சுமந்திரன், சீ.வீ.கேவுக்கு நீதிமன்று உத்தரவு

தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர், பதில் பொதுச் செயலாளர் ஆகியோர் வழக்காளிக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் தெரிவின்போது கட்சி தலைமையின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயல்பட்டார் என்று கூறி அந்தச் சபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினரான பொன்னம்பலம் இராசேந்திரம் என்பவரை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியின் பதில் பொதுச் செயலாளரான எம். ஏ சுமந்திரன் கடிதம் ஒன்றின் மூலம் இடைநிறுத்தினார்.

இதையடுத்து, இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர், ‘எந்த அடிப்படையுமற்று மத்திய குழுவின் தீர்மானம் எதுவுமின்றி கட்சியிலிருந்து தன்னிச்சையாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நீக்கினார்’, என்று குறிப்பிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் முற்பட்ட கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன், கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையை எழுத்து மூலம் தாக்கல் செய்திருந்தனர்.

இரு தரப்பாலும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் தாக்கல் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இன்று – செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, தமிழ் அரசுக் கட்சியின் தலைவராலும் செயலாளராலும் எழுப்பப்பட்ட ஆட்சேபனை தவறானது என்றுகூறி ஆட்சேபத்தை தள்ளுபடி செய்தது. எனினும், வழக்காளி தொடுத்த வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்ல உத்தரவிடப்பட்டது. மேலும், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் தலா 10 ஆயிரம் ரூபாயை தவறான ஆட்சேபனையை எழுப்பியமைக்கான வழக்குச் செலவாக வழக்காளியான பொன்னம்பலம் ராசேந்திரத்துக்கு செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles