பொலிஸாரை கண்டதும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விழுங்கிய 21 வயது இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,
சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞருக்கு இன்று மே 13ஆம் திகதி காலை திடீர் சுகயீனம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, தன்னைக் கைது செய்ய வந்தபோது 10 கிராம் ஹெரோயினை பொலித்தீன் பையுடன் விழுங்கியிருந்தார் என்ற விடயத்தை பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்றுவரும் இளைஞருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
