இலங்கையில் சாதாரணர்களுக்கு எட்டாக்கனியாகும் சொந்தவீடு!

நாட்டில் சாதாரண மக்களுக்கு வீடு வாங்கும் கனவு என்பது எட்டாக்கனியாகி வருகிறது என்று புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகின்றபோதிலும்  வீடுகளுக்கான தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி நிலவுகிறது என்று லங்கா புறொப்பெர்டி வெப், நும்பியோ நிறுவனங்களின் ஆய்வுகள் கூறுகின்றன.

நாட்டில் சுமார் ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 508 வீடுகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத அதிகரிப்பாகும்.

மக்களின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் வீடுகளை வாங்குவதற்கு உலகில் மிகக் கடினமான நகரமாக 55 இற்கு ஒன்று என்ற விகித அடிப்படையில் கொழும்பு முதலிடத்தில் உள்ளது.

இலங்கையில் ஒரு குடும்பத்தின் சராசரி மாதாந்த வருமானம் 76 ஆயிரத்து 414 ரூபாயாகும். அடிப்படை வாழ்க்கைச் செலவுக்கு 84 ஆயிரத்து 231 ரூபாய் தேவைப்படுகிறது. இதனால் சேமிப்பு என்பது சாத்தியமற்றதாகி, மக்கள் கடன்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டில் இவ்வாறான நெருக்கடிகள் நிலவியபோதிலும், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சொகுசு வீட்டுத் துறையில் சாதனை படைத்துள்ளன. 2025 ஆம் ஆண்டில் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு 74 சதவீதம் உயர்ந்து 106 கோடி அமெரிக்க டொலர்களை எட்டியது.

குறிப்பாக, வீடமைப்பு மற்றும் சொத்து மேம்பாட்டுத் துறையில் முதலீடுகள் 2.05 கோடி டொலர்களிலிருந்து 5. 62 கோடி டொலர்களாக மும்மடங்கு அதிகரித்துள்ளன. புதிய வீடுகள் அமைப்பதில் நிலவும் பின்னடைவுக்கு கட்டுமான செலவுகள் அதிகரித்துள்ளமையே முக்கிய காரணமாகும்.

தற்போது இலங்கை மத்திய வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை 7 வீதம் முதல் 15 வீதம் வரையான எல்லைக்குள் குறைத்துள்ளமை ஒரு சாதகமான விடயமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், வீடமைப்பு என்பது செல்வந்தர்களுக்கு மாத்திரமான ஒரு வரப்பிரசாதமாக மாறிவிடக் கூடாது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

புதுமையான – செலவு குறைந்த கட்டுமான முறைகள் மற்றும் முறையான அரச கொள்கைகள் மூலமே இந்த வீட்டுத் தட்டுப்பாட்டை நீக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles