மேற்கு வங்கத்தில் 400 உணவகங்களில் 5 ரூபாய்க்கு மீன் சாப்பாடு – முதல்வர் அறிவிப்பு

மக்களின் நலனுக்காக 400 பிரத்தியேக உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாள் 5 ரூபாய்க்கு மீன் சாப்பாடு விநியோகிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பா.ஜ.க. 208 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதல்வராக கடந்த 9ஆம் திகதி சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். இதையடுத்து பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு வங்கத்தில் சுமார் 400 பிரத்தியேக உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு 5 ரூபாய்க்கு மீன்சாத உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க மக்களின் பிரத்தியேக உணவான மீன் உணவுக்கு சிக்கல் ஏற்படும் என மம்தா பானர்ஜி கூறி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார்.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்ற அறிவிப்பையும் சுவேந்து அதிகாரி இன்று வெளியிட்டுள்ளார்.

அதோடு, இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.3,000 வழங்கும் அன்னபூர்ணா திட்டத்துக்கான விண்ணப்பங்கள் நாளை (மே 27) முதல் விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் சுவேந்து அதிகாரி, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற அனைத்து இந்தியக் குடிமக்களும் தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles