உலகளாவிய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழல் ஆகியவை இலங்கையின் எதிர்கால பொருளாதாரப் பயணத்தில் கடுமையான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டம் தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர், சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு யுத்த சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது, இலங்கையின் பணவீக்க உயர்வுக்கு வழிவகுப்பதுடன், நடப்புக் கணக்கு சமநிலையை பலவீனப்படுத்தக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை மூலமான வருமானம் வீழ்ச்சியடைவதும் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவதற்கு மேலும் ஒரு காரணியாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான பொருளாதார சீர்திருத்த திட்டங்களை இலங்கை வலுவாக செயல்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தின் மீளெழுச்சித் திறன் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
