நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் வசூல் ரூ. 300 கோடியைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஜே .பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், கருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது பல பகுதிகளிலும் கருப்புக்கு இன்று வரை டிக்கெட் விற்பனைகள் சிறப்பாகவே நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
விரைவிலேயே, ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்து வெளியாகவுள்ளது. இதுவரை கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கருப்பு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து, வரும் ஜூன் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
