உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் நாட்டில் பரவும் மூளைக்காய்ச்சல் நோய் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், எபோலா நோய் தொடர்பாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விசேட கவனம் செலுத்தியுள்ளது. அது தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளன. சில ஆபிரிக்க நாடுகளில்தான் எபோலா முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனம் இதனை ஓர் அவசர நிலைமையாக அறிவித்தது. அதுமுதல், சுகாதார அமைச்சின் நோய் விஞ்ஞான பிரிவு இது குறித்து தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மூளைக்காய்ச்சல் பரவல் நாட்டில் கண்டறியப்பட்டது முதல் அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனாலேயே, தானசாலைகளில் சூடான பானங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில், ஏதேனும் ஒரு வழியில் மூளைக்காய்ச்சல் பரவக்கூடும் என்பதால் ஆகும். எனினும், ஓரளவுக்கு அதனைத் கட்டுப்படுத்துவதற்குச் சுகாதாரப் பிரிவினர் செயல்பட்டுள்ளனர்.
ஓரளவுக்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என்றும் அமைச்சர் கூறினார்.
