உலக சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அந்தச் சுமையை அரசாங்கம் மட்டும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உலகளாவிய மோதல்களால் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் சுமார் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
இதன் விளைவாக நாட்டின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு ஜனவரியில் 12. 6 கோடி அமெரிக்க டொலராக இருந்த நிலையில், மே மாதத்தில் 52. 1 கோடி டொலராக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முழுச் செலவையும் திறைசேரி ஏற்றுக்கொண்டால், அந்தப் பணத்தை ஈடுசெய்ய மீண்டும் மக்கள்மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் எச்சரித்தார்.
எனவே, அரசாங்கம் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதுடன், எரிபொருள் நிறுவனங்களும் ஒரு பகுதியைச் சுமந்து, மற்ற பகுதி விலை அதிகரிப்பின் மூலம் ஈடுசெய்யப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.
அதேவேளை, எந்தச் சூழலிலும் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எரிபொருள் இறக்குமதி தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
