சுவிஸில் இருந்து சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன.
இந்தக் கொலையை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை நேற்று அதிகாலை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்களிடமிருந்து சில சான்றுப் பொருள்களும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
