உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தேவாலயங்களை உளவு பார்த்தார் சுரேஷ் சாலே – அரசாங்கம் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் சுரேஷ் சாலே நேரடி தொடர்புகளை பேணியிருந்தார். அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவிகளை வழங்கியிருந்தார். தீவிர விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார். இதன்போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

அவர் தனது உரையில் மேலும் கூறியவை வருமாறு,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 3 வாரங்களுக்கு முன்னர் சுரேஷ் சாலே நீர்கொழும்பு பகுதிக்கு 4 பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூசையில் கலந்துகொள்ள வருபவர்கள் உள்ளிட்ட தகவல்களை திரட்டியிருந்தார்.

இவ்வாறு நீர்கொழும்புக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. அவர் ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பை சேர்ந்தவர். எனினும், தற்போதுவரை அவர் காணாமல் போயுள்ளார்.

இதேபோன்று, தாக்குதல் நடத்தப்படும்வரை இஸ்லாம் அடிப்படைவாதிகளை பயன்படுத்தி பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. அதுமாத்திரமின்றி, இந்தத் தாக்குதலின் உண்மைகளும் முக்கிய விவரங்களும் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக மிக முக்கியமான மற்றும் இரகசிய தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் சுரேஷ் சாலே முன்னெடுத்திருந்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சாட்சியாளர் அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், கடந்த ஜூன் 3ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன், சந்தேக நபரான சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்தச் சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னரே, சுரேஷ் சாலே அதுவரை விசாரணைக்கு ஒத்துழைத்த முறையை முழுமையாக மாற்றி, அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஜூன் 5ஆம் திகதி இரவு முதல் திட்டமிட்டபடி உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார். தனது உறவினர்கள் கொண்டு வந்த உணவையும் அவர் நிராகரித்தார்.

உணவு தவிர்ப்பையடுத்து. அவரின் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தது. இதைத் தொடர்ந்து சிறைச்சாலை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் ஜூன் 7 ஆம் திகதி பலத்த பாதுகாப்புடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் 42 ஆவது விடுதியில் மனநல மருத்துவர்கள், உடலியல் நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட போது சுரேஷ் சாலேயிடமிருந்து கைப்பற்றப்பட்ட நவீன அப்பிள் கைபேசி மற்றும் அவரது வீட்டில் சோதனையிடப்பட்டு கைப்பற்றப்பட்ட மடிக்கணினி ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்கோ, அவற்றின் கடவுச்சொற்களை வழங்கவோ அவர் மறுத்துவிட்டார். இதன்மூலம் உண்மைகளை மறைக்க முற்பட்டுள்ளார்.

எனினும், ஏனைய அறிவியல் மற்றும் தொலைபேசி சான்றுகளின் மூலம் இந்தச் சதித்திட்டத்துடனும் அதன் முன்தயாரிப்புகளுடனும் அவருக்கு உள்ள தொடர்பு மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எந்தவோர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கோ அல்லது அழுத்தங்களுக்கோ அஞ்சி இந்த விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 278 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துஇ 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்தச் சதித்திட்டத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தப்பியோட முடியாதபடி நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

சில வங்குரோத்து அரசியல் கட்சிகள் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு சுரேஷ் சாலேயின் விடயத்தை அரசியலாக்கி பொதுமக்களை திசைதிருப்ப முயல்கின்றன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு சிறைச்சாலைக்குள் அதிசொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. அவர்கள் மேற்கொள்ளும் உண்ணாவிரத போராட்டங்களுக்கு அஞ்சி அரசாங்கம் விசாரணைகளைக் கைவிடாது.

இது மாத்திரமின்றி, கடந்த காலங்களில் பொதுமக்களின் சொத்துகள், பொது பணத்தை கொள்ளையிட்டமை, ஊடகவியலாளர்கள் படுகொலை – கடத்தப்பட்டமை உள்ளிட்ட சகல குற்றச்சாட்டுகள் குறித்தும் முறையான – நடுநிலையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இந்த விசாரணைகள் அரசியல் தலையீடின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். குற்றவாளிகள் எவரும் தப்பியோட முடியாதபடி சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles