நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2025) பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியாகின. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூயில் 81 மாணவர்கள் 9 ஏ சித்தியையும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 89 மாணவர்கள் 9ஏ சித்தியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றுள்ளனர். அத்துடன், அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை மாணவர்களின் உயர்தரத்துக்கான தேர்ச்சி வீதத்திலும், தேசிய மட்ட தரவரிசையிலும் வடக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
