பிரான்ஸில் தற்போது நிலவி வரும் கடும் வெப்ப அலை (Heatwave) மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதும் தற்போது கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்தச் சூழலில், பிரான்ஸில் மட்டும் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளளர் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பதிவான இந்த உயிரிழப்புகள் குறித்த முக்கிய விவரங்கள் வருமாறு
தென்கிழக்கு பிரான்சின் கார்பென்ட்ராஸ் பகுதியில், காரில் விடப்பட்ட 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
போர்டோ பகுதியில் 80 முதல் 95 வயதுக்குட்பட்ட மூன்று முதியவர்கள் வெப்பம் தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் உயிரிழந்தனர்.
வெப்பத்திலிருந்து தங்களைக் குளிர்வித்துக்கொள்ள ஏரி மற்றும் ஆறுகளில் குளித்தபோது, முறையான கண்காணிப்பு இல்லாத இடங்களில் சுமார் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வெப்ப அலையின் தீவிரம்
பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உதாரணமாக, போர்டோ நகரில் 41.9°C மற்றும் பொய்ட்டியர்ஸ் நகரில் 41.2°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்ப அலைக்கு ‘ஒமேகா பிளாக்’ (Omega Block) என்று பெயரிடப்பட்டுள்ளது.
வட ஆபிரிக்காவிலிருந்து (சஹாரா பாலைவனம்) வீசும் வெப்பமான காற்று, நிலப்பரப்பில் தேங்கி நகராமல் இருப்பதால் பிரான்சஸூடன் சேர்த்து பிற ஐரோப்பிய நாடுகளிலும் வெப்பநிலை 5 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
பிரான்ஸின் பாதிக்கும் மேற்பட்ட துறைகளுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இது சுமார் 39 மில்லியன் மக்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
