
மறைந்த இயக்குநர் கே. பாக்கியராஜுக்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தையை இழந்த மகன் சாந்தனுவை, விஜய் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.
பாக்னியராஜை இழந்து அவருக்கு அருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்த மனைவி பூர்ணிமாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முதல்வர் விஜய் ஆறுதல் கூறினார்.
இயக்குநர் கே. பாக்யராஜ், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பாக்யராஜ் இல்லத்துக்கு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பாக்கியராஜுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், தந்தையை இழந்து கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்த மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், தியாகராஜன், பிரசாந்த், சின்னி ஜெயந்த், சார்லி, மற்றும் அரசியல்கட்சித் தலைவர்கள் திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன், வி.கே. சசிகலா உள்ளிட்டோர் பாக்கியராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, முதல்வர் விஜய் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே. பாக்கியராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன் என்று பதிவிட்டிருந்தார்.
