அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பர தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி, நாளை 30 ஆம் திகதி கட்டாரில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா புலனாய்வு ஊடகமான Axios தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிய அண்மைய மோதல்களை நிறுத்தி, அந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்த மோதல் நிறுத்தம் தொடர்பான செய்தியை முதலில் வெளியிட்ட Axios செய்தி நிறுவனம், அமெரிக்காவின் மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி, இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை கத்தாரில் மீண்டும் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
ஜூன் 17 அன்று இரு நாடுகளும் கையெழுத்திட்ட 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து தொழில்நுட்ப மட்டத்தில் ஆலோசிக்க இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிகாரி கூறினார். அதன்படி, தற்போதைக்கு இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்தி, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் ஒன்று ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் ஒருவரை ஒருவர் இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி, பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. அதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மதிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.
மற்றொரு முன்னணியில், லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஹெஸ்பொல்லா அமைப்பின் நிலத்தடிக் கட்டமைப்புகளை இஸ்ரேல் மீண்டும் தாக்கி அழித்ததாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இது, லெபனானுடன் அண்மையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் நடைபெற்ற தாக்குதலாகும். லெபனானில் நடைபெறும் மோதல்கள் முடிவுக்கு வந்தால்தான் பரந்த அளவிலான அமைதி ஒப்பந்தம் நிலைத்திருக்கும் என்று ஈரான் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
