
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும், இன்றும் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவங்களில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
1,800 இற்கும் மேற்பட்ட தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலையில், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்த தகவல் ஒன்றை கைதி ஒருவர் அதிகாரிகளுக்குக் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டை அடுத்தே நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த வன்முறை வெடித்தது என்று முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்று ஏற்பட்ட ஆரம்பக்கட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, ஆண் மற்றும் பெண் கைதிகள் குழுக்களாக சிறைச்சாலையின் கூரைகள் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் பெருமளவில் நேற்று இரவு களமிறக்கப்பட்டனர். நள்ளிரவளவில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்கவின் தகவல்படி, இன்று திங்கட்கிழமை காலை கைதிகளுக்கு உணவு விநியோகிக்கப்பட்ட போது, இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகள் மீது கைதிகள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான அதிகாரிகளை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் வரை துரத்திச் சென்ற பெருமளவிலான கைதிகள், பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பியோட முற்பட்டுள்ளனர். வாயிலில் இருந்த அதிகாரிகள் அவர்களைத் தடுக்க முயன்ற போதும், அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே, மேலதிகப் படையினர் வரவழைக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தேவையான குறைந்தபட்ச பலம் பயன்படுத்தப்பட்டது. இதன்போது சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு நாள் வன்முறைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனைக்குள் புகுந்து மருந்துகளைக் கொள்ளையடித்ததுடன், ஏனைய கட்டடங்களையும் உடைத்து, இரும்புப் பொருள்களைத் ஆயுதங்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
கைதிகள் ஆயுதங்களைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவே சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கிலிருந்து துப்பாக்கிகள் அகற்றப்பட்டன என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இன்று திங்கட்கிழமை காலையில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கைதிகள், அவர்களின் கைபேசிகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சிறைச்சாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் (பாதாள உலகக் குழுக்கள்) தொடர்புடைய 26 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பல்வேறு தாக்குதல்கள், கொள்ளைகள் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் தண்டனை பெற்றுவரும் ‘கட்டுல்லேகம சுரேஷ்’ என்ற கைதியே இந்த ஒட்டுமொத்த வன்முறையையும் திட்டமிட்டு வழிநடத்தினார் என்று பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் சந்தேகிக்கின்றன.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
