உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இங்கிலாந்து இடம்பிடித்துள்ளது. எனினும் அமெரிக்கா அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது.
2026ம் ஆண்டுக்கான உலக கடவுச்சீட்டுத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு முதல், குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் மூலம் குளோபல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் இந்த ஆண்டு அறிக்கையைத் தொகுத்து வருகிறது.
இந்தத் தரவரிசையானது, 197 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கடவுச்சீட்டுகளை வரிசைப்படுத்தி, மேம்பட்ட பயண வசதி, முதலீடு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியப் பரிமாணங்களில் பயண ஆவணங்களின் வலிமையை மதிப்பிடுகிறது.
100 இற்கு 96.5 புள்ளிகளுடன் சுவீடன் தரவரிசையில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் 72.95 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் நீல நிற கடவுச்சீட்டு எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ஏழாவது இடத்திலும், 2024ம் ஆண்டு ஆறாவது இடத்தையும் பிரித்தானிய கடவுச்சீட்டு பிடித்திருந்தது.
பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய பயணப் பிரச்சினைகள் விடயத்தில், ஐக்கிய இராச்சியம் மற்ற நாடுகளை விட பலவீனமாக உள்ளது என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
சுவிட்சர்லாந்து 95.2 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பின்லாந்து மூன்றாம் இடத்திலும், ஜேர்மனி நான்காம் இடத்திலும், நெதர்லாந்து ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
டென்மார்க் ஆறாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்தன.
இருப்பினும், 2021ம் ஆண்டு முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, நடப்பு ஆண்டில் பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
