கோலாலம்பூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழா திடீரென பரபரப்பாக மாறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருமண விருந்தில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, 26 வயதுடைய மணமகனின் தொண்டையில் மீன் முள் சிக்கியதால் வாந்தி மற்றும் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சூழல் ஏற்பட்டது.
இது குறித்து மணமகள் கூறுகையில் –
அவர் வழக்கம்போல உணவருந்தியபோதுதான் இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிட்டார். ஆரம்பத்தில் வாந்தி எடுத்ததால் உடல்நிலை சீரானது போல் தோன்றினாலும், பின்னர் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுக்கச் சென்றபோது மீண்டும் வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கமரா மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மீன் முள் ஏற்படுத்திய காயம் மட்டும் தொண்டையில் இருப்பதும், முள் ஏற்கனவே வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மணமகன், இனி சில காலத்திற்கு மீன் சாப்பிட விருப்பமில்லை என்று கூறினார் என மணமகள் தெரிவித்தார். திருமண நாளிலேயே நடந்த இந்த எதிர்பாராத சம்பவம் புதுமணத் தம்பதியினருக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியுள்ளது.
