கனடிய போர்க்கப்பலில் நவீன ஏவுகணை சோதனை வெற்றி

உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியான ‘ரிம்பக்’ கூட்டுப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள கனடிய கடற்படையின் ‘எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா’ போர்க்கப்பல், இந்த வாரம் இரண்டு ‘மார்க் 46’ ரக டொர்பிடோ ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

கனடாவின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் முறைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன மேம்படுத்தலை மதிப்பிடுவதற்கான முதலாவது வாய்ப்பாக இச்சோதனை அமைந்துள்ளது.

ஹவாய் கடற்பரப்பில் நடைபெறும் இப்பயிற்சியில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 31 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25,000 படைவீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

“நான் கடற்படையில் 20 வருடங்களாகப் பணியாற்றுகிறேன், ஆனால் டொர்பிடோ ஏவுகணை ஒன்றை நான் ஏவுவது இதுவே முதல் முறை” என ‘எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா’ கப்பலின் கட்டளை அதிகாரி ஜஸ்டின் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜூலை 7 ஆம் திகதி நடத்தப்பட்ட இச்சோதனை, கடற்படை வீரர்களுக்கு ஒரு அரிய போர்முறைப் பயிற்சியாக அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இக்கப்பலில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள ‘அண்டர்வாட்டர் வார்ஃபேர் சூட் அப்கிரேட்’ என்ற அடுத்த தலைமுறை சென்சார் தொழில்நுட்பத்தை சோதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் டொர்பிடோக்களை மிக நீண்ட தூரத்திலேயே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது இந்த புதிய அமைப்பு. இந்த புதிய மாற்றத்தை ‘ஐபோன்’ அறிமுகத்துடன் ஒப்பிட்டுக் கூறிய அதிகாரி சிம்மன்ஸ், இது கனடிய கடற்படைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்புமுனை என்று விவரித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பம் 2034 ஆம் ஆண்டிற்குள் கனடாவின் ‘ஹாலிஃபாக்ஸ்’ ரகப் போர்க்கப்பல் கடற்படைப் பிரிவு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கனடிய கடற்படையின் மற்றொரு போர்க்கப்பலான ‘எச்.எம்.சி.எஸ் ரெஜினா’ , அடுத்த வாரம் நடைபெறும் ரிம்பக் பயிற்சியில் ‘எவொல்வ்ட் சீ ஸ்பேரோ பிளொக் II’ ரக ஏவுகணையை நேரடிச் சோதனைக்கு உட்படுத்தவுள்ளது.

இந்த ஏவுகணை போர்க்கப்பலின் ரேடாரை நம்பியிருக்காமல், தனது சொந்த ரேடார் மூலம் வான்வழித் தாக்குதல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டதாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles