கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான போதைப்பொருட்களை வைத்திருந்த ஒருவருக்கு எதிராக 21 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடா எல்லை பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
எல்லை பாதுகாப்பு முகமையின் தீவிர விசாரணைக்குப் பின்னர், கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வன்கூவர் நகரில் உள்ள வீடு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது, முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு ‘கிளாக்’ ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு பகுதி-தானியங்கி துப்பாக்கி உட்பட மொத்தம் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
துப்பாக்கிகளின் சத்தத்தைக் குறைக்கும் ‘சப்ரெஸர்’, பல்வேறு அளவிலான தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி தயாரிக்கப் பயன்படும் பாகங்கள் பலவும் பறிமுதல் செய்யப்பட்டன.
துப்பாக்கிகளுடன் சேர்த்து, கொக்கைய்ன், கெட்டமைன் , எம்.டி.எம்.ஏ ஆகிய தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களும், அவற்றை எடைபோடப் பயன்படுத்தும் தராசுகள் மற்றும் 6 கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பாக டிலான் ஜேம்ஸ் கென்னடி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது ஆயுதங்களை அலட்சியமாகப் பயன்படுத்தியமை, கடத்தல் நோக்கில் போதைப்பொருட்களை வைத்திருந்தமை மற்றும் தடைசெய்யப்பட்ட சாதனங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட 21 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கென்னடி, வன்கூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கில் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
