ஒட்டுண்ணித் தாக்கத்தால் கால்நடை இறக்குமதிக்கு கனடா தற்காலிகத் தடை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கன்றுக்குட்டிகளில் ஆபத்தான ஒட்டுண்ணிப் புழுக்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து கால்நடைகளை இறக்குமதி செய்வதற்கு கனடா தற்காலிகத் தடையை விதித்துள்ளது.

இதன்படி, டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பசுக்கள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என கனடா உணவு ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் மாட்டிறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தியில் முன்னணி மாநிலமாக விளங்கும் டெக்சாஸில், இரண்டாவது கன்றுக்குட்டியிலும் New World Screwworm எனப்படும் ஆபத்தான ஒட்டுண்ணி கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலைமையைத் தொடர்ந்து, டெக்சாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபோட், மாநிலத்தில் பேரழிவு அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

இந்த ஒட்டுண்ணி பரவல் கோடைகாலம் முழுவதும் மேலும் விரிவடையக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம்’ எனப்படும் இந்த ஒட்டுண்ணி, மனிதர்கள் மற்றும் சூடான இரத்தம் கொண்ட விலங்குகளின் திறந்த காயங்கள் அல்லது உடலின் சவ்வுப் பகுதிகளில் முட்டையிடும் ஈக்களின் மூலம் பரவுகிறது.

முட்டைகள் பொரிந்த பின்னர் உருவாகும் புழுக்கள், உயிருள்ள திசுக்களைத் தின்னத் தொடங்குவதால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுகிறது.

உரிய சிகிச்சை வழங்கப்படாத பட்சத்தில், அவை உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள லா பிரையர் பகுதியில் மூன்று வாரமே ஆன கன்றுக்குட்டி ஒன்றின் தொப்புள் பகுதியில் இந்த ஒட்டுண்ணி முதன்முதலாக கண்டறியப்பட்டது.

கடந்த 60 ஆண்டுகளில் டெக்சாஸ் மாநிலத்தில் பதிவான முதல் சம்பவம் இதுவாகும். இதனைத் தொடர்ந்து, சவாலா கவுண்டியில் ஒரு மாத வயதுடைய மற்றொரு கன்றுக்குட்டியிலும் இரண்டாவது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், கால்நடை நடமாட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles