சிங்கப்பூர் – மலேசியா இடையே அரிய நட்புணர்வு: அதிபர் தர்மன்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே வேறு எங்கும் பார்க்கமுடியாத அரிய உறவு நீடித்து வருவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு முதல் முறையாக அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரைச் சந்தித்தார்.

பின்னர் பேசிய திரு தர்மன், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், வரப்போகும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் சேவை (ஆர்டிஎஸ்) ஆகியவற்றை இரு நாடுகளின் பொதுவான லட்சியத்திற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.

நமது பொருளியல் வளர்ச்சி அடைவதற்கான இருதரப்பு விருப்பத்தை இவை பிரதிபலிக்கின்றன, – என்றார் அவர்.

ஆர்டிஎஸ் ரயில் இணைப்புத் திட்டம் நிறைவடைந்தவுடன் சுற்றுலா, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் சிங்கப்பூரர்களுக்கும் மலேசியர்களுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் மேலும் அதிகரிக்கும்.

சிங்கப்பூர்-மலேசிய உறவைப் போன்று வேறு எங்கும் காண்பது அரிது. அதற்குரிய சிறப்பு அம்சங்களை இருநாடுகளும் கொண்டுள்ளன. எதிர்காலத்தை நோக்கி ஒன்றாகப் பயணம் செய்வதும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதும் ஒவ்வொரு தலைமுறைத் தலைவர்களாலும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் ஒரு நிலையான முடிவு.

சிரமமான சூழ்நிலைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாறும் உள்ளது. இருதரப்பு உறவை இருநாடுகளும் மேலோங்கச் செய்து வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கியமான பிரச்சினைகள் தீர்க்க வேண்டியிருக்கின்றன. ஆனால் இந்தப் பிரச்சினைகள் ஒருபோதும் இரு நாட்டின் உறவுகளைப் பாதிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்டதில்லை. ஒன்றாகச் சேர்ந்து வளர்வது, இருதரப்பு நலன்களை விரிவுபடுத்துவது ஆகிய பெரிய இலக்குகளில் எப்போதும் கவனம் செலுத்தும் இந்த அடிப்படை அணுகுமுறையே, நமது உறவை ஒரு வலுவான உறவாக மாற்றியுள்ளது. இன்றைய உலகச் சூழ்நிலையில் இது ஒரு அரிய உறவாகும்,” என்று அதிபர் தர்மன் வலியுறுத்தினார்.

பல சிங்கப்பூர் குடும்பங்களுக்கு எல்லைக்கு அப்பால் நீண்ட வரலாறும் தொடர்ச்சியான உறவுகளும் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளிலும் மாறி மாறி வசித்து, பணிபுரியும் பல மலேசியர்களும் சிங்கப்பூரர்களும் மக்களுக்கிடையிலான இயற்கையான பிணைப்பைப் பிரதிபலிப்பதாகவும் சொன்னார்.

இந்த நீடித்த உறவுமுறையே நாம் முன்னோக்கிச் செல்வதற்கான கூடுதல் நம்பிக்கையைத் தருகிறது, – என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles