புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கும் அதன் நிருபருக்கும் எதிராக அமைச்சர்கள் கா.சண்முகமும் டான் சீ லெங்கும் தொடுத்த அவதூறு வழக்கில் உயர்நீதிமன்றம் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளது.
அவர்கள் இருவருக்கும் ஆளுக்கு $230,000 இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) உத்தரவிட்டது.
உயர்தர பங்களா பரிவர்த்தனைகளின் தொடர்பில், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி புளூம்பெர்க் கட்டுரை வெளியிட்டிருந்தது. அமைச்சர்களின் 2023ஆம் ஆண்டு சொத்து ஒப்பந்தங்கள் குறித்த விவரங்களும் அந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்தன.
குவீன் ஆஸ்ட்ரிட் பார்க் பகுதியில் இருந்த சண்முகத்தின் முன்னைய இல்லம் 88 மில்லியன் வெள்ளிக்கு ‘யுபிஎஸ் டிரஸ்டீஸ்’ நிறுவனத்திற்கு விற்கப்பட்டதும், பிரைசே பார்க் பகுதியில் உள்ள ஒரு பங்களாவை டாக்டர் டான் கிட்டத்தட்ட 27.3 மில்லியன் வெள்ளிக்கு ‘கேவியட்’ (caveat) எனும் சட்டபூர்வ உரிமை கோரல் அறிவிப்பு இன்றி வாங்கியதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அமைச்சர்கள் தங்களது சொத்துப் பரிவர்த்தனைகளை வெளிப்படைத்தன்மையற்ற முறையில் நடத்துவதற்காக, தகவல்களை வெளிப்படுத்தும் தேவைகள் இல்லாத சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதும், தங்களது பரிவர்த்தனைகளை மூடிமறைக்கவும், பணமோசடிச் சாத்தியங்கள்வரை நீடிக்கக்கூடிய தீவிரச் சோதனைகளைத் தவிர்க்கவும் அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்பதும் அந்தக் கட்டுரையின் இயல்பான, யதார்த்தனமான பொருள் என்று நீதிபதி ஆட்ரி லிம் தமது எழுத்துபூர்வத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, அந்தக் கட்டுரை, வழக்குத் தொடுத்தவர்கள் இருவரையும் அவதூறு செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
“ஒரு நபர் பணமோசடி தொடர்பான விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காகவே தனது சொத்து ஒப்பந்தங்களை திட்டமிட்டு வடிவமைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு, சமூகத்தில் உள்ள நேர்மைச் சிந்தனையுடைய மக்களின் பார்வையில் அவரது நன்மதிப்பைக் குறைக்கும்,” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
வாங்குபவரின் செல்வநிலை, சமூக நிலைப்பாடு, அடையாளம் ஆகியவற்றின் மீது கவனம் ஈர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, உயர்தர பங்களா ஒப்பந்தங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன என்பதைத் தலைப்பு, முதல் பத்தி ஆகியவை வாசகருக்கு உடனடியாக உணர்த்துகின்றன என்று நீதிபதி லிம் கூறினார்.
