காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை டில்லியில் நேரில் சந்தித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளன.
இவர்களில் காங்கிரஸ், ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், த.வெ.க. கூட்டணியில் இணைவதாகவும் அறிவித்துள்ளன.
தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க. தலைவர்கள் தி.மு.கவை கடுமையாக விமர்சித்தும், த.வெ.க. அரசைப் பாராட்டியும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகுவதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் தனியாக அமர இருக்கை கோரி தி.மு.க. தரப்பிலிருந்து மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழலில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், டில்லி சென்றுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய வைகோ, “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ம.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது” என்றார்.
மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் ஆரம்பத்திலிருந்தே மும்மொழித் திட்டத்தை எதிர்த்து வருகிறோம். அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்றார்.
தி.மு.க. கூட்டணியிலிருந்து த.வெ.கவுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற ம.தி.மு.கவால் நேரடியாக த.வெ.க. அரசுக்கு ஆதரவு தர இயலாதது என்பது குறிப்பிடத்தக்கது.
