2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை காணொளி இணைப்பு மூலம் சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்ரெம்பர் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இருந்து காணொளி இணைப்பு ஊடாக அவர் சாட்சியமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் காணாமற்போன போது கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தார். அவரை சாட்சியமளிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் 27ஆம் திகதி முதன்முறையாக அழைப்பு விடுத்திருந்தது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து மின்னணு ஒளி-ஒலி வசதி மூலம் சாட்சியமளிக்க அனுமதி கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருந்தது.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நீதிமன்றில் ஆஜராக வேண்டியிருந்தபோதிலும், உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்ததன் காரணமாக அவர் ஆஜராகவில்லை என நீதிமன்ற பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பான காரணங்களை உத்தியோகபூர்வமாக முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததுடன், வழக்கு நடவடிக்கைகளை தொடர்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
