யாழ். சுன்னாகத்தில் அனுமதியின்றி பௌத்த மத்திய நிலையம் அமைப்பு

யாழ். வலிகாமம் தெற்கு, சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் ஒன்று அடாத்தாக அமைக்கப்பட்டு வருகின்றது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுமார் 4 பரப்பு விஸ்தீரணம் கொண்ட கந்தரோடை விகாரைக் காணியில், இந்தப் பௌத்த மத்திய நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இடம்பெற்றன.

அந்தக் காலத்தில் பிரதேச சபையின் அனுமதியின்றி எழும்பிய கட்டடத்தை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டதை அடுத்து, கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது வெளிப்படையாகத் தெரியாதவாறு உயரமாக மறைப்புச் செய்யப்பட்டு, பௌத்த மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாதாரண மக்களின் அனுமதியற்ற கட்டுமானங்களை நீதிமன்றம் மூலம் அகற்றும் பிரதேச சபைகள், இந்தத் தியான மண்டபம் உரிய அனுமதியின்றி அமைக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்தக் கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டு வருவதால், வடக்கு மாகாண ஆளுநர் இந்த விடயம் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பிரதேச சபைத் தலைவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், சபை உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், முறையான அனுமதிகளைப் பெறாமல் தொடரும் இந்தக் கட்டுமானம் தொடர்பில் சபையில் பேசப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடத் தற்போதைய சபை தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles