கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த அல்வின் என்பவர், ஷார்ஜாவில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் ஒன்பது துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி மற்றும் மகனைக் காணவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் அல்வின் பணியாற்றி வந்ததாகவும், ஜூலை 20ஆம் தேதி முதல் அவர் உறவினர்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் சகோதரர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அல்வின் செல்போனிலிருந்து உறவினர்களுக்கு தகவல் மட்டும் வந்துள்ளது. அதில், தான் உடல் நலக் குறைவாக இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதால் பேச முடியவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஆல்வின் எப்போதும் வாய்ஸ் மெசேஜ்தான் அனுப்புர், செய்திகளை டைப் செய்து அனுப்ப மாட்டார் என்பதால், அவரது சகோதரருக்கு சந்தேகம் வந்து புகார் அளித்த போதுதான், ஆல்வின் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
அவரை மீண்டும் மீண்டும் செல்போனில் அழைக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால், ஒரு முறையும் போனை எடுக்கவும் இல்லை, எங்களை அழைக்கவும் இல்லை என்கிறார் ஆல்வின் சகோதரர்.
பிறகுதான், ஷார்ஜாவில் பணியாற்றும் ஆல்வினின் நண்பரைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது ஆல்வின் இந்தியாவுக்குச் சென்று விட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், ஆல்வின் இந்தியாவுக்கும் வராத நிலையில், அவரது பாஸ்போர்ட் தரவுகள் மூலம் அவர் ஷார்ஜாவில்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஷார்ஜா காவல்துறை விசாரணை நடத்தியதில், ஆகஸ்ட் 12ஆம் திகதி சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள், ஒன்பது துண்டுகளாக வெட்டப்பட்டு மீட்கப்பட்ட உடல் ஆல்வினுடையது என்றும், அந்த காரும் ஆல்வினுக்குச் சொந்தமானது என்றும் தெரிய வந்தது. டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆல்வின், 20 ஆண்டுகளுக்கு முன்பு டினா என்பவரை திருமணம் செய்து, அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் துபைல் 10ஆம் வகுப்பு படிக்கும் நிலையில், டினா ஆசிரியராக துபையில் பணியாற்றி வருகிறார் என்றும் தற்போது டினா மற்றும் அவரது மகனின் இருப்பிடம் பற்றி தகவல் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அல்வின் தங்கியிருந்த குடியிருப்பில் பதிவான சிசிடிவி காட்சிகளில், இரண்டு ஆண், ஒரு பெண் உடைமைகளை எடுத்துச் செல்வது பதிவாகியிருக்கிறது. ஆனால், காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை கிடைத்த பிறகே என்ன நடந்தது என்பது தெரிய வரும் என உறவினர்கள் கூறுகிறார்கள்.
மேலும், டினா மற்றும் அவரது மகனைக் காணவில்லை என்றும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவிலிருந்து, உடுப்பி காவல்நிலையத்துக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக ஆல்வின் கொலை குறித்து எந்த தகவலும் பகிரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
