சிவகாசி அருகே செங்கமலப் பட்டியில் இன்று காலை நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ரவீந்திரன் என்பவரது மகன்களான ராம்பிரசாத்(35), ராமசந்திரன்(37) ஆகியோருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) 4 பேர் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நிலையில், காலை 8.15 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த ராமசந்திரன் என்பவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், வெடி விபத்தில் உயிரிழந்த ராம்பிரசாத் என்பவரின் உடல் உட்பட இருவரின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெடி விபத்தின்போது ஏற்பட்ட அதிர்வு 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உணரப்பட்டது. தகர செட் அருகே நிறுத்தி இருந்த கார் மற்றும் பைக் சேதமடைந்தன.
இந்த விபத்தில் அருகே உள்ள 3 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
இறந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறி 50 மீட்டர் தொலைவு வரை சிதறி கிடந்ததால் இறந்தவர் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
