இந்திய எல்லைப் பகுதிகளில், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட ‘SH-15’ என்ற சக்கரங்களால் இயங்கும் அதிநவீன பீரங்கிகளை (Wheeled Self-propelled Artillery Guns) பாகிஸ்தான் அதிக அளவில் களமிறக்கியுள்ளது.
சீனாவின் ‘நொரின்கோ’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த 155mm 52-கலிபர் பீரங்கி அமைப்பு, சீனாவில் PCL-181 என்று அழைக்கப்படுகிறது.
பாகிஸ்தான் 2019 ஆம் ஆண்டில் சீனாவிடம் 236 SH-15 பீரங்கிகளுக்கான கொள்வனவுக்கான ஆணையை வழங்கியது. இதன் விநியோகம் 2022இல் தொடங்கியது.
மேலும், தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானின் ‘ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தக்ஷிலா’ (Heavy Industries Taxila) ஆலையிலேயே இந்த பீரங்கிகளைத் தயாரிப்பதற்கான உரிமத்தையும் பாகிஸ்தான் பெற்றுள்ளது.
இந்த பீரங்கிகள் முக்கியமாக இந்தியாவுக்கு எதிரான எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் எல்லைக்கு அருகில் உள்ள குஜ்ரன்வாலா , சியால்கோட் மற்றும் ஜலால்பூர் ஜட்டான் ஆகிய பகுதிகளில் இவை குவிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள முதல் 52 கலிபர் பீரங்கி இதுவாகும். ‘ராக்கெட்-அசிஸ்டெட்’ குண்டுகளைப் பயன்படுத்தும் போது, இது 50 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற பாலைவனப் பகுதிகளில் அமெரிக்க தயாரிப்பான ‘M-109’ சங்கிலித் தடம் (Tracked) பீரங்கிகளையும், சமவெளி மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் இந்த சக்கரங்களால் இயங்கும் ‘SH-15’ பீரங்கிகளையும் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துகிறது.
இந்தியாவும் தனது பீரங்கிப் படையை அதிவேகமாக நவீனமயமாக்கி வருகிறது. M777, K-9 வஜ்ரா, தனுஷ் பீரங்கிகள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 307 ATAGS பீரங்கி அமைப்புகளை இந்தியா படைகளில் இணைத்து வருகிறது.
அத்துடன், பாகிஸ்தானின் SH-15 பீரங்கிக்கு இணையான ‘மவுண்டட் கன் சிஸ்டம்’ (Mounted Gun System – MGS) என்ற சக்கர பீரங்கியை இந்தியாவும் உள்நாட்டிலேயே உருவாக்கி, தற்போது அதன் சோதனைகளை இறுதிக்கட்டத்தில் மேற்கொண்டு வருகிறது.
