புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன் பின்னர், அதனைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தம் வழங்கிவரும் நிலையில், இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதனை மீண்டும் வலியுறுத்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முருகேசு சந்திரகுமார் ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் ஆகியோரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, மொஹமட் தாஹிர் உள்ளிட்டோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 1988 – 1989 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எவ்வாறு கூட்டாக இணைந்து செயற்பட்டன என்பது குறித்தும், தற்போது மீண்டும் ஒரு கட்டமைப்பாக இணைந்திருப்பது குறித்தும் பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினர்.
