சுமார் 20 மாதங்களாகக் வெற்றிடமாக இருந்த ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு, முன்னாள் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் பிராட்டின் நியமனத்தை ட்ரம்ப் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முன்மொழிவு வெளியிடப்பட்ட நிலையில், 2024 நவம்பரில் அப்படவியிலிருந்து விலகிய கரோலின் கென்னடிக்கு பதிலாக இவர் தற்போது பொறுப்பேற்கவுள்ளார்.
தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்த பிராட், முக்கிய கனிமங்கள் சார்ந்த ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தோ – பசிபிக் பிராந்தியக் கூட்டாண்மை ஆகியவையே தனது முதன்மை முன்னுரிமைகளாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
உயர்நிலைத் தூதர்கள் மற்றும் வெளியுறவுத்துறைப் பதவிகள் உட்பட 74 அரசாங்க நியமனங்கள் அடங்கிய பட்டியலுக்கு அமெரிக்க செனட் சபை 51 இற்கு 47 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்தது.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும், முந்தைய ஜனநாயகக் கட்சியின் அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட பல தொழில்முறை தூதர்களைப் பணிநீக்கம் செய்து மரபுகளை உடைத்தார். இதனால் 100 இற்கும் மேற்பட்ட தூதர் பதவிகள் காலியாகின. தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்டியலில் 11 வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் தூதர் அந்தஸ்திலான 5 உயர் பதவிகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
டேவிட் பிராட்டின் நியமனம் குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் –
“டேவிட் பிராட்டிற்கு ஆஸ்திரேலியா ஒரு அன்பான விருந்தோம்பலையும், நல்ல நட்பையும் வழங்கும். அவரை ஆஸ்திரேலியாவிற்கு வரவேற்பதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.
முக்கிய கனிமங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியக் கூட்டாண்மை ஆகிய அவரது முன்னுரிமைகளில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு. இரு நாடுகளின் நலன்களுக்காகவும் இந்த நட்புறவை நாங்கள் இணைந்து வலுப்படுத்துவோம்,” என்று கூறினார்.
