கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் உலகப் புகழ்பெற்ற ‘கடவுளின் கை’ கோல் அடிக்கப் பயன்படுத்தப்பட்ட கால்பந்து ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
1986ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆர்ஜென்ரீனா அணி வென்றது. அந்தப் போட்டியில் ஆர்ஜென்ரீனா அணியின் வீரரும், கால்பந்து உலகின் ஜாம்பவானுமான மரடோனா அடித்த இரு கோல்கள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றது.
அதில், ’கடவுளின் கை’ என்னும் சர்ச்சையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோலை அடிக்கப் பயன்படுத்தப்பட்ட கால்பந்து அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஏலத்தில் 10 மில்லியன் டொலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 95 கோடி) விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் 1986இல் நடைபெற்ற உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில், மரடோனா பந்தை கையால் தட்டி அவரைவிட உயரமான இங்கிலாந்து கோல்கீப்பரைத் தாண்டி கோல் அடித்தார். அதே போட்டியில், மைதானத்தின் நடுவிலிருந்து இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் பலரையும் தாண்டி அதிவேகமாக பந்தைக் கடத்திச் சென்று 2ஆவது கோலையும் அடித்தார் மரடோனா. அது, “நூற்றாண்டின் சிறந்த கோல்” எனக் கூறப்படுகிறது. இப்போட்டியில் ஆர்ஜென்ரீனா 2-1 என்ற கணக்கில் வென்றது.
போட்டி முடிந்த பின்னர், செய்தியாளர்கள் சர்ச்சைக்குரிய கோல் பற்றி கேட்டபோது, “கொஞ்சம் மரடோனாவின் தலையாலும், கொஞ்சம் கடவுளின் கையாலும் அடிக்கப்பட்டது” என்று மரடோனா கூறினார். அந்தத் தொடரில் ஆர்ஜென்ரீனா உலகக்கோப்பை வென்றது.
இந்த நிலையில், டெக்சாஸில் உள்ள ‘ஹெரிடேஜ் ஏல நிறுவனம்’, ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறவுள்ள ஏலத்தில், 2.5 மில்லியன் டொலர் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வைக்கவுள்ளது. இந்தப் பந்து 10 மில்லியன் டொலர் அல்லது அதற்கு மேல் வரை விற்பனையாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பிட்ட போட்டியில் மரடோனா அணிந்திருந்த ஜெர்சி தற்போது உலகின் மிக விலையுயர்ந்த கால்பந்து சட்டையாக 9.3 மில்லியன் டொலருக்கு (ரூ. 88 கோடி இந்திய மதிப்பில்) விற்பனையாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
