சிங்கப்பூரில் உள்ள ஓர் அடையாளம் காணப்படாத வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் குடியிருப்பாளர்கள் அங்கு பணியாற்றும் துப்புரவாளர்மீது காட்டும் பரிவும் கனிவும் பலரை வியப்பூட்டவைத்துள்ளது.
உணவு வகைகளை அவரது தனியறை வாசல் கதவில் மாட்டிச் செல்லும் வழக்கத்தை குடியிருப்பாளர் ஒருவர் சில ஆண்டுகளாகக் கவனித்து, அதனைச் சமூக ஊடகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டார்.
மின்தூக்கி அருகில் உள்ள துப்புரவாளரின் அறைக்கு வெளியே ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒருசிலர் உணவுப் பொருள்களையும் இதர பயனுள்ளவற்றையும் வைத்துச் சென்றனர்.
நாளடைவில் அந்தப் பழக்கத்தை அந்தக் கட்டடத்தில் வாழும் பலரும் தொடர்ந்தனர் என அந்த குடியிருப்பாளர் அவரது பதிவில் தெரிவித்தார்.
அதோடு மேல்மாடிகளில் இருந்து கீழே விழக்கூடிய துணிகளையும் ஆடைகளையும் அதனைத் தேடுவோர் மீண்டும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அவற்றை அந்தத் துப்புரவாளர் அதே அறைக்கு அருகே வைத்துச் செல்வதையும் பதிவு குறிப்பிட்டுள்ளது.
அமைதியான முறையில் செய்யப்பட்டுவந்த ஒருங்கிணைந்த சமூக அறத்தை அந்தப் பதிவாளர் 2023ஆம் ஆண்டுமுதல் புகைப்படமெடுக்கத் தொடங்கினார்.
ஒருநாள் அந்தப் பதிவாளரின் தாயாரும் அந்த அறைக்கு வெளியே உணவுகளை வைத்துச்செல்லத் தொடங்கினார். தேவைப்படும்போது அந்தத் துப்புரவாளர் அவற்றை எடுத்துச் செல்வார் என்று பதிவாளரின் தாயார் நம்பிக்கையுடன் கூறியமை, பதிவாளருக்கு வியப்பை அளித்தது.
பல நாள்களில் மாறுபட்ட நேரங்களில் ஏதாவது புதிய வகையான பொருள்களோ, உணவோ அங்கு வைக்கப்படும். இதனை யார் ஆரம்பித்தார் என்பதை அறியமுடியாவிட்டாலும் பல அண்டை வீட்டார்கள் அப்பழக்கத்தைத் தொடர்வது மனதுக்கு ஆறுதலளித்ததாக அவர் பதிவிட்டார்.
