கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிச்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, பசிபிக் கடற்கரையோரம் அமைந்துள்ள சொக்கோ மாகாணம், சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகே, சுமார் 96 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த பேரிடரால் ரிசாரல்டா மாகாணம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், காளி நகரிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கிப்தோ உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
பாதுகாப்பு கருதி பெரெய்ரா, மனிசாலேஸ், கிப்தோ, ஆர்மீனியா, கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொலம்பியாவின் 9 மாகாணங்கள் மற்றும் 32 மாகாணத் தலைநகரங்களில் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. அத்துடன், அண்டை நாடான வெனிசுலாவின் தாசிரா, பாரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் எவ்வித சுனாமி ஆபத்தும் ஏற்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
