சிங்கப்பூரில் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் இயங்கும் ‘ஆஸ்க் மப்ஸ்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் மப்ஸிற்குள் அமைந்துள்ள ‘ஆஸ்க் மப்ஸ்’ அம்சம், சிங்கப்பூர் உட்பட ஆசிய – பசுபிக் வட்டாரத்தில் ஓகஸ்ட் 7ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
‘கூகுள் மப்ஸ்’ செயலியைப் பயன்படுத்துவோர், செல்ல விரும்பும் அல்லது தேடும் இடங்கள் குறித்த கேள்விகளைப் பேச்சு வழக்கிலான எளிய மொழியில் கேட்டுத் துல்லியமான தகவல்களைப் பெற இந்தப் புதிய அம்சம் உதவுகிறது.
இதற்கு முன்னர், குறிப்பிட்ட சில சொற்களை மட்டுமே பயன்படுத்தித் தேடும் நிலை இருந்த சூழலில், தற்போதைய மாற்றத்தின் மூலம் பயனீட்டாளர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.
கூகுள் நிறுவனம், இதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) அறிக்கையொன்றை வெளியிட்டது.
உணவகங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், வணிக வளாகங்கள் பற்றிய விவரங்களை விரைவாகவும் எளிதாகவும் கண்டறிய இது வழிவகுக்கிறது. பயனீட்டாளர்களின் தேடல் அனுபவத்தை மேலும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் மாற்றுவதே புதிய அம்சத்தின் நோக்கம் என்று கூகல் குறிப்பிட்டது.
இந்த அம்சம் முதன்முதலில் இவ்வாண்டு மார்ச் மாதம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
