கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, சர்வதேச விசாரணை கோரி முன்னெடுக்கப்படும் “நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை செம்மணியில் ஆரம்பமானது.
போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன், மலர் வணக்கமும் இடம்பெற்றது.
செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை நினைவுகூரும் காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், போராட்டத்தின் அடுத்த கட்டமாக எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்க்கப்படாத மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிக்கான பயணத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
