பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி சிறைச்சாலை உடை அணிவித்து நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக மகா சங்கத்தினரும் பொதுமக்களும் இன்று (07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கில் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, காவி உடையை அகற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகா சங்கத்தினர் கோஷங்களை எழுப்பியதுடன், பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியமை தொடர்பில் ஏற்கனவே சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் எழுத்துமூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஞானசார தேரரை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும்போது, அவருக்கு காவி உடையை அணிவிக்குமாறு கோரி தேரர்களும் ஆதரவாளர்களும் கோஷங்களை எழுப்பினர்.
சிறைச்சாலை வாகனத்தை தடுத்து நிறுத்தவும் சிலர் முயற்சித்த நிலையில், பொலிஸார் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதேவேளை, ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியமை சாசனத்துக்கு எதிரான நடவடிக்கை என மகா சங்கத்தினர் விமர்சித்ததுடன், இதுபோன்ற நடவடிக்கை இலங்கையில் மீண்டும் இடம்பெறக்கூடாது எனவும் வலியுறுத்தினர்.
