ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள 18ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வருகை தரவுள்ளதை ஈரான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த விஜயத்தின் போது, மாநாட்டில் பங்கேற்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார்.
இச்சந்திப்பில் இந்தியா – ஈரான் இடையிலான உறவை வலுப்படுத்துதல், சபாஹார் துறைமுக திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழல்கள் குறித்து முக்கியமாக கவனஞ்செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் பணியாற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்தும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்படவுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது, செப்ரெம்பர் 12-13 திகதிகளில் இந்தியா நடத்தும் பிரிக்ஸ் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி ஈரான் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருந்தார்.
அதற்கு முன்னர் 2024 அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போதே இவ்விரு தலைவர்களும் முதன்முதலில் நேரில் சந்தித்திருந்தனர்.
