7 வருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமாக அமைவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சுமுகமான மாற்றத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகவும் பார்க்கப்படும்.

எதிர்வரும் செப்ரெம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்தியா பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துகிறது.

2020 ஆம் ஆண்டு எல்லை மோதலுக்குப் பின்னர் பெய்ஜிங் மற்றும் டெல்லி இடையிலான உறவைச் சீரமைக்க எடுக்கப்படும் முயற்சிகளின் அடையாளமாகவே ஜி ஜின்பிங்கின் இந்த வருகை உற்றுநோக்கப்படுகிறது.

சீன அதிகாரிகள் ஹோட்டல்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என இந்திய மூலாதாரங்கள் தெரிவித்துள்ளன.

இம்முறை சீன ஜனாதிபதியுடன் சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகை தரவுள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜயத்தின் போது 200 இற்கும் குறைவான அதிகாரிகளே வருகை தந்திருந்தனர்.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சீனாவுக்கு விஜயம் செய்தார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மெதுவாகவே சீரடைந்து வருகிறது.

சமீபத்தில் கூட எல்லை தொடர்பான புதிய தகராறு இரு தரப்பிற்கும் இடையே ராஜதந்திர ரீதியிலான காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த உச்சிமாநாட்டின் போது, நீண்டகாலமாக இருந்து வரும் எல்லைத் தகராறுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கையாண்டு, இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை இருநாட்டு அதிகாரிகளும் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஜி ஜின்பிங்கின் இறுதி பயணத் திட்டங்கள் மற்றும் இந்திய-சீன இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரல் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “BRICS கூட்டமைப்பின் ஒத்துழைப்பிற்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதுடன் தீவிரமாகப் பங்கேற்கிறது.

இம்முறை தலைமையை ஏற்றுள்ள இந்தியா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு சீனா ஆதரவளிக்கும்” எனக் கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles