பெர்லினுக்கு அருகில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ருமேனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ரஷ்ய உளவு வலையமைப்பின் அங்கத்துவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை ஜேர்மனிக்கு நாடு கடத்துவது தொடர்பில் ருமேனிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பீகல் இதழ் Spiegel magazine இன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், கடந்த ஆண்டு (2025)ஒக்டோபர் முதலாம் திகதி 24 வயதான உக்ரேனியர் ஒருவர் போலந்திலிருந்து பெர்லினுக்கு பயணம் செய்து, அங்கு கைத்துப்பாக்கிகள் அடங்கிய இரு பொட்டலங்களை நிலத்திற்கு அடியில் மறைத்து வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் போலந்திற்கு திரும்பியுள்ளார்.
பின்னர் உக்ரேனிய விரைவு விநியோக சேவையான நோவா போஸ்ட் மூலம் தீப்பற்றும் சாதனங்கள் அடங்கிய பொட்டலங்களை அனுப்பியதாக சந்தேகத்தின் பேரில் மற்றொரு உக்ரேனியருடன் புக்கரெஸ்டில் தடுத்து வைக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பெர்லினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
இதனைத் தொடர்ந்தே குறித்த சந்தேக நபரை ஜேர்மனிக்கு நாடு கடத்துவது தொடர்பில் ருமேனியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதால் சந்தேகநபர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில் இவ்வாறான சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
