இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும் – ஜனாதிபதி அநுர

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து, சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயாபுரம்’ வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

மலையக மக்கள் எமது சகோதர மக்கள் என்ற வகையில் இந்நாட்டின் பூரண உரிமைகளையும் வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அவர்களின் பிள்ளைகளுக்கும் உரித்தாக்குவது நியாயமற்றது என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் வரவு- செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்யும்போது மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவுகளை அந்த ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.

நமது நாட்டின் இதயமாகக் கருதப்படும் மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான பொறுப்புகளை வகிக்கும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து, முழுமையான அதிகாரங்களைக் கொண்ட மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகாரசபையை அமைப்பதற்கான சட்டத்தை இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்த இந்தக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு, தமக்கென்று இடம் மற்றும் கௌரவமான வாழ்க்கையை உரித்தாக்கும் நோக்கத்துடன் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

10 பேர்சஸ் காணி மற்றும் 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட முழுமையான 50 வீடுகள் இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை ஆகியவற்றைக் கொண்ட இந்த ஒவ்வொரு வீட்டின் செலவும் சுமார் 32 லட்சம் ரூபாவாகும். அத்துடன், புதிய வீடுகளில் குடியேறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தளபாடங்கள், சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 175,000 ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருள்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles