உக்ரைனின் தலைநகர் கீவ் அருகிலுள்ள புச்சா மாவட்டத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பும் தங்கள் எதிரிகளின் முக்கிய கட்டமைப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கீவ் நகரத்தின் அருகிலுள்ள புச்சா மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் சுமார் 27 பேர் கொல்லப்பட்டனர் என, உக்ரைனின் அதிகாரிகள் இன்று (ஆக. 29) அறிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில், 50 இற்கும் அதிகமான குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீப்பற்றி எரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், மைலா கிராமத்தில் உள்ள கிடங்கு மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறிய உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் காப்பகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே, உக்ரைனின் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் நோக்கில் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 3 ஆவது நாளாக ரஷிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படும் நிலையில் இதுவரை 370 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
