எஸ்.சி.ஓ. உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியை கத்தரித்து, எடிட் செய்த படத்தை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளது.
கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கெக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், சீன அதிபா்
ஷு ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் அனைத்து நாடுகளின் அதிபர்களும், பிரதமர்களும் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த புகைப்படம் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் அலுவலக எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடியை கத்தரித்து, எடிட் செய்த புகைப்படம் பதிவிடப்பட்டமை சர்ச்சையானது.
உலகத் தலைவர்களுக்கு மத்தியில் ஷாபாஸ் ஷெரீஃப் நிற்கும் வகையில் குழுப் படத்தை கத்தரித்து, அந்த படத்திலிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டிருந்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் விமர்சித்து சமூக ஊடகங்களில் முழுப் படத்தை பகிரத் தொடங்கிய நிலையில், பின்னர் முழுப் படத்தை பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அவரது அலுவலக எக்ஸ் கணக்குகளில் பகிரப்பட்டன.
