தெற்கு லெபனானின் நபதியே மாவட்டத்தில் இஸ்ரேல் இன்று நேற்றுக் காலை முதல் நடத்திய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நபதியே அல் பெவ்கா பகுதியில் இருவரும், அரப் சலீம் நகரில் இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
அரப் சலீம் பகுதியில் இரு சிறுமிகள் உட்பட ஆறு பேரும், நபதியே அல் ரஹ்பத் பகுதியில் எட்டு பேரும், கபார் ரம்மான் பகுதியில் நான்கு பெண்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களால் தொன்மையான கட்டடங்கள், முன்னாள் மேயரின் இல்லம் மற்றும் பூங்கா உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மருத்துவமனை கட்டிடமொன்றும் தாக்குதலில் முற்றாக அழிக்கப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மீறும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள லெபனான் சுகாதார அமைச்சகம், அதற்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதல்கள் குறித்து கருத்து வெளியிட்ட லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், அரசு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு இஸ்ரேலின் தாக்குதல்களைத் தடுத்து, லெபனானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஜோசப் அவுன் கோரிக்கை விடுத்துள்ளார்.
