விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ச, இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் நலன்களை விசாரிப்பதற்காகவே அவர் அங்கு சென்றார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று நாமல் ராஜபக்சவைப் பார்ப்பதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்துக்கு வருகை தந்தார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வழக்கின் சந்தேகநபராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
