இந்தோனேசிய படகு விபத்தில் ஆறுபேர் பலி – தொடர்கிறது தேடுதல்

இந்தோனேசியாவின் ஜாவா கடலில் வார இறுதியில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாயமான 129 பேரைக் தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு ஜாவாவில் உள்ள சுராபயாவிலிருந்து (Surabaya) தெற்கு கலிமந்தனில் உள்ள பஞ்சர்மாசின் (Banjarmasin) நோக்கி 243 பயணிகளுடன் சென்ற ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என்ற கப்பல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோசமான வானிலை காரணமாகக் கடலில் மூழ்கியது.

அதன்பின்னர், கப்பலிலிருந்த 108 பேரை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கடலில் எழும் சீற்றமான அலைகள் மற்றும் பலத்த காற்று காரணமாகத் தேடுதல் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மீட்பு முகமையின் தலைவர் Mohammad Syafii தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களைக் கண்டறியக் குறைந்தபட்சம் 622 பணியாளர்கள், 17 கப்பல்கள், 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஷஃபீ மேலும் கூறினார்.

சில கப்பல்கள் விபத்து நடந்த இடத்தைச் சென்றடைந்த போதிலும், கவிழ்ந்த கப்பலுக்குள் மீட்புப் பணியாளர்கள் நுழைவது கடினமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“நீருக்கடியில் சென்று மீட்கும் திறன் படைத்த பணியாளர்களையும் நாங்கள் ஈடுபடுத்தவுள்ளோம். ஆனால், தற்போதைய வானிலை அதற்குச் சாதகமாக இல்லை.

வானிலை சீரடையும் வரை காத்திருக்கும் அதேவேளையில், சிறப்புத் திறன் கொண்ட கூடுதல் பணியாளர்களை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று கூறிய அவர், பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தினார்.

விபத்துக்குள்ளான படகில் 500 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்பதால், அதில் அதிக அளவு பயணிகள் ஏற்றப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் துதி புர்வாகாந்தி  தெரிவித்துள்ளார்.

17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், விமானப் பயணத்தை விடக் கடல் பயணம் மலிவானது மற்றும் எளிதில் அணுகக்கூடியது என்பதால் படகுப் போக்குவரத்தையே அங்குள்ள மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இருப்பினும், அப்பகுதியில் அடிக்கடி இத்தகைய விபத்துகள் சம்பவித்து வருகின்றன.

கடந்த மாதம் நடந்த வெவ்வேறு சம்பவங்களில், நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற இரண்டு படகுகள் கடலில் தீப்பற்றி எரிந்தன. மதுரா தீவு அருகே படகில் தீப்பிடித்ததில் 5 பேரும், சுற்றுலாத் தீவான பாலியிலிருந்து சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles