யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு நேற்று தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் நச்சுப்புகை பரவிய நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது.
மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் குப்பைமேடே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
குப்பைமேட்டில் ஏற்பட்ட தீ காரணமாக யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதான வீதி சுமார் இரண்டு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் புகைமண்டலமாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், நவாலி மற்றும் கல்லூண்டாய் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும் நச்சுப்புகை சென்றதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் குப்பைமேடு பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் இருந்த போதிலும், தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.
தீயை உடனடியாக அணைக்குமாறு மக்கள் வலியுறுத்தியபோது, தீயணைப்பு வாகனம் உள்ளே செல்வதற்கான பாதை சீராக இல்லை என மாநகர சபை பணியாளர்கள் தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்களுடன் முரண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்து, தீ ஏற்பட்டிருந்த பகுதியை பார்வையிட்டனர். தீப்பற்றிய பகுதிக்கு செல்வதற்கான பாதை சீராக இருப்பதாக தெரிவித்த பொலிஸார், உடனடியாக தீயை அணைக்குமாறு மாநகர சபை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
எனினும், பொலிஸாரின் அறிவுறுத்தலுக்குப் பின்னரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பொலிஸார் கடும் தொனியில் அறிவுறுத்திய பின்னரே தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த குப்பைமேடு வாராந்தம் தொடர்ச்சியாக தீப்பற்றி எரிந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தடுப்பதற்கு யாழ்ப்பாண மாநகர சபையோ அல்லது வலி.தென்மேற்கு பிரதேச சபையோ இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பகீரதன், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
