ஏழு நாட்களில் 12 மலைச் சிகரங்களை வெற்றிகரமாக அடைந்து, தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்து மலேசிய இந்திய சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் மலையேறும் வீரர் லோகச்சந்திரன் ராமச்சந்திரன்!
இவரது இந்த அபார முயற்சிக்கு இன்று மலேசிய சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ‘Most Summits Conquered in a Week’ எனும் பிரிவில் லோகசந்திரனுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஏழு நாட்களில் 9 மலைச் சிகரங்களை அடைந்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற லோகசந்திரன், இவ்வாண்டு அதே ஏழு நாட்களில் 12 சிகரங்களை அடைந்து தனது சொந்தச் சாதனையையே முறியடித்துள்ளார்.
இது மலேசிய சாதனைப் புத்தகத்துடன் லோகசந்திரன் மேற்கொண்ட இரண்டாவது சாதனை முயற்சி எனக் கூறிய மெகாட், அடுத்த ஆண்டு ஏழு நாட்களில் 18 மலைச் சிகரங்களை அடைந்து மூன்றாவது முறையாக தனது சாதனையை முறியடிக்க லோகசந்திரன் திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
அந்த முயற்சி சாத்தியமானால், லோகசந்திரனின் சாதனைப் பயணத்திற்கு மலேசிய சாதனைப் புத்தகம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால்தான் இந்தச் சாதனையை நிறைவு செய்ய முடிந்தது. தனிப்பட்ட ஒருவராக என்னால் இதனைச் செய்திருக்க முடியாது,” என லோகசந்திரன் கூறினார்.
ஒவ்வொரு முறையும் தனது எல்லையைத் தானே தாண்டிச் செல்லும் லோகசந்திரனின் பயணம், முயற்சியும் மனஉறுதியும் இருந்தால் மலேசிய இந்திய இளைஞர்களாலும் புதிய வரலாற்றைப் படைக்க முடியும் என்பதற்கான ஊக்கமாக அமைந்துள்ளது.
இன்று லோகசந்திரனின் பெயரில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் மேலும் ஒரு சாதனை பதிவாகியுள்ள நிலையில்; மலேசிய இந்திய சமூகத்தின் சாதனைப் பயணத்திலும் பெருமைக்குரிய மற்றொரு அத்தியாயம் இணைந்திருக்கிறது.
