நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காட்டிலும் பன்மடங்கு பாரதூரமான மற்றும் ஆபத்தான அம்சங்களை உள்ளடக்கியே ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ தயாரிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டமூலம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முறறாக ஒழிப்பதாகவும், அதற்கு மாற்றீடாகப் பிறிதொரு சட்டத்தை இயற்றப் போவதில்லை என்றும் நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருந்தது.
1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கடுமையான விமர்சனங்கள் நிலவி வந்த நிலையில், அதனை முழுமையாக இரத்துச் செய்யச் கடந்த காலங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் பலமடங்கு பாரதூரமான அம்சங்கள் இந்தப் புதிய சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்துக்கு மிக நீண்ட மற்றும் பரந்த அளவிலான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு கருதும் எத்தகைய செயற்பாடும் அல்லது அரசுக்கு எதிரான நியாயமான போராட்டங்களும் கூட ‘பயங்கரவாதம்’ என்ற முத்திரைக் குத்தப்பட்டு முடக்கப்படும் அபாயம் உள்ளது.
பொலிஸாருக்கு மாத்திரம் உரியதாக இருக்க வேண்டிய பல அதிகாரங்களை முப்படையினருக்கும் வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் இந்தச் சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை மிகவும் பாரதுரமானதொரு விடயமாகும். முப்படையினரிடம் சிவில் மக்கள் சார்ந்த அதிகாரங்களைக் கையளிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு இத்தகைய புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசு எந்தவித வெளிப்படையான கலந்துரையாடல்களுமின்றி இரகசியமாகவே முன்னெடுத்துள்ளது.
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் எவ்வாறு கொண்டுவரப்பட்டதோ, அதே போன்றதொரு மறைமுகப் போக்கிலேயே இந்தச் சட்டமூலமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் சட்டமாக மாறினால் நாட்டின் ஜனநாயகமும் மனித உரிமைகளும் முற்றிலுமாக இல்லாதொழிக்கப்பட்டுவிடும்.
மக்களுக்கு எதிரான சட்டங்களை நாங்கள் கொண்டுவரவில்லை என்று அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சியினரை இலக்கு வைத்து இத்தகைய சட்டங்கள் இயற்றப்படும் போது, இறுதியில் சாதாரண மக்களின் குரலும் ஒடுக்கப்படும். பேச்சுரிமை முற்றாகத் தடுக்கப்பட்டு, நாடு ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் பயணிக்கத் தொடங்கும்.” – என்றார்.
