வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ரெக் நிர்வாகிகள் சந்திப்பில் கூகுள் நிர்வாக செயல் இயக்குநர் சுந்தர் பிச்சைக்கு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்யறிவு பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் முன்னணி ரெக் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உலகப் பெரும் பணக்காரரும் முன்னணி ரெக் நிர்வாகியுமான எலான் மஸ்க், மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க், கூகுள் நிர்வாக செயல் இயக்குநர் சுந்தர் பிச்சை, ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரெக் நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பிறகு வெஸ்ட் விங்கிற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், அங்கு ரெக் நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.
ட்ரம்ப் அவரிடம், “சுந்தர், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்க, அதற்கு சுந்தர் பிச்சை, “நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்…” என்று பேசத் தொடங்கியபோது, திடீரென குறுக்கிட்ட அதிபர் ட்ரம்ப், “இவர் ஒரு மொன்ஸ்டர்; ஆனால், யாருக்கும் தெரியாது” என்றார்.
தொழில்நுட்பத் துறையில் சுந்தர் பிச்சையின் செல்வாக்கையும் வெற்றியையும் பாராட்டும் விதமாக பேசிய ட்ரம்ப்க்கு உடனடியாக பதிலளித்த சுந்தர் பிச்சை, “மொன்ஸ்டர் என்பது சிறந்த ரேக்லைன்” என்றதும் அங்கு சிரிப்பலை உருவானது.
அதிபர் டிரம்ப், சுந்தர் பிச்சை உள்ளிட்டோரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
